வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்காக போட்டியிலிருந்து விலக மாட்டோம் - இந்திய கம்யூனிஸ்டு
வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்காக போட்டியிலிருந்து விலக மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்டு கூறிவிட்டது.
ஐதராபாத்,
உத்தரபிரதேச மாநிலம் அமேதியை தொடர்ந்து, கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதை அக்கட்சி மேலிடம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள வயநாடு தொகுதி கடந்த 2009-ம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்று விளங்கும் தொகுதிகளில் வயநாடும் ஒன்று. கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்த தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட இருப்பதால் கேரள மாநில காங்கிரசார் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்து உள்ளனர். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதும் கேரளாவில் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.பி.சுனீர், வயநாடு தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், ‘வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அங்கு அவரை தோற்கடிக்க நாங்கள் அனைத்து வழிகளிலும் போராடுவோம்.
ராகுல் காந்திக்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என்று தெரிவித்தார்.
தேசிய அளவில் இடதுசாரிகள் பா.ஜனதாவுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த போட்டி நல்லதாக தெரியவில்லை என்று கூறிய சுதாகர் ரெட்டி, வயநாடு தொகுதிக்கு பதிலாக கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் பா.ஜனதா வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஒன்றை ராகுல் காந்தி தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story