மக்கள் விரும்பியதாலேயே அரசு செலவில் எனது சிலைகளை வைத்தேன்: மாயாவதி
மக்கள் விருப்பத்தின்படியே தனது சிலைகளை அமைத்ததாக மாயாவதி தனது செயலை நியாயப்படுத்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்றபோது நினைவகங்கள் பல கட்டப்பட்டன. இதில் மாயாவதி மற்றும் அவருடைய கட்சி சின்னமான யானையும் இடம்பெற்றது விமர்சனத்திற்கு உள்ளானது.
இதில் ரூ.1400 கோடி வரையில் ஊழல் நடந்துள்ளது என விசாரணையும் தொடங்கியது. பொதுமக்களின் நிதியை ஒரு கட்சியின் சிலைகளை அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, லக்னோ, நொய்டாவில் யானை சிலைகள் மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப்பட்டதற்கு ஆன செலவை மாயாவதியே திரும்ப செலுத்த செய்யலாம் என யோசனை தெரிவித்துள்ளது. "மாயாவதி தனது சிலைகளிலும் கட்சி சின்னத்திலும் செலவழித்த பொது பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் தற்காலிகமாக கருதுகிறோம்" என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கூறியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 22-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தது.
இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள மாயாவதி, மக்கள் விருப்பப்படியே தனது சிலைகளை அமைத்ததாக தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story