கார் வாங்க தன்னை கடத்தி மிரட்டுகின்றனர் என நாடகம் போட்ட பிளஸ் 2 மாணவன் கைது


கார் வாங்க தன்னை கடத்தி மிரட்டுகின்றனர் என நாடகம் போட்ட பிளஸ் 2 மாணவன் கைது
x
தினத்தந்தி 3 April 2019 9:13 AM GMT (Updated: 3 April 2019 9:13 AM GMT)

அரியானாவில் ரூ.3 கோடி மதிப்பிலான கார் வாங்க தன்னை கடத்தி மிரட்டுகின்றனர் என நாடகம் போட்ட 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

குர்காவன்,

அரியானாவின் குர்காவன் நகரில் கிருஷ்ணா காலனி பகுதியில் சந்தீப் குமார் (வயது 19) என்ற பள்ளி கூட மாணவன் வசித்து வந்துள்ளான்.  அந்த பகுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த சந்தீப் கடந்த 29ந்தேதி வீட்டில் இருந்து கிரிக்கெட் அகாடெமிக்கு சென்றுள்ளான்.  அதன்பின் பல இடங்களில் தேடியும் சந்தீப்பை காணவில்லை.

இதுபற்றிய விசாரணையில், ரூ.3 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்குவதற்காக சந்தீப் கடத்தல் நாடகம் போட்டது தெரிய வந்துள்ளது.  குர்காவன் நகர போலீஸ் அதிகாரி போக்கன் கூறும்பொழுது, வீட்டில் இருந்து கிளம்பிய சந்தீப் கடத்தல் நாடகம் உண்மை என தெரிய வேண்டும் என்பதற்காக கோயில் அருகே தனது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு 2 நாட்களாக பிவாடி பகுதியில் தங்கியுள்ளான்.

இதன்பின் அங்கு குப்பை பொறுக்கும் நபரிடம் ரூ.500 கொடுத்து சந்தீப்பின் சகோதரர் நவீன் குமாரிடம் போன் செய்து பணய தொகை தரும்படி கேட்க செய்துள்ளான்.  இதனை தொடர்ந்து குர்காவன் பகுதிக்கு சந்தீப் சென்றுள்ளான்.  அங்கு போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் அவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.  அங்கு சந்தீப்பின் குடும்பத்தினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

அங்கிருந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடத்தலுக்கு பின் மயங்கி விட்டேன் என கூறியுள்ளான்.  இதனால் சம்பவ இடத்திற்கு அவனை போலீசார் அழைத்து சென்றனர்.  அங்கு சந்தீப் கூறிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளன.  இதன்பின்னர் ரூ.3 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த கார் வாங்க தன்னை கடத்தி மிரட்டுகின்றனர் என கடத்தல் நாடகம் போட்ட உண்மையை சந்தீப் போலீசாரிடம் ஒப்பு கொண்டுள்ளான்.

Next Story