பின்னணி பாடகர், நடிகை இடையே போட்டி: நட்சத்திர அந்தஸ்து பெறும் அசன்சோல் தொகுதி
இரு பிரபலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டி என்பதால் அசன்சோல் தொகுதி நட்சத்திர தொகுதியாக அறியப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மத்திய மந்திரி சபையில் மிகவும் இளையவராக இருப்பவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாபுல் சுப்ரியோ. கனரக தொழில்துறையின் இணை மந்திரியான இவர் கடந்த 1990-களின் மத்தியில் சினிமா பின்னணி பாடகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அத்துடன் ஒருசில படங்களிலும் தலை காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோரின் மீது கொண்ட ஈர்ப்பால் பின்னர் பா.ஜனதாவில் இணைந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற பாபுல் சுப்ரியோ முதலில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த மந்திரிசபை மாற்றத்தின் போது கனரக தொழில்துறை ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு பின்னணி பாடகராக இருந்து அரசியலில் நுழைந்த பாபுல் சுப்ரியோ, வருகிற தேர்தலிலும் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, பங்குரா தொகுதி எம்.பி.யும், பிரபல நடிகையுமான மூன்மூன் சென்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. மூன்மூன் சென்னும் அசன்சோல் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு பிரபலங்களுக்கு இடையே நடைபெறும் போட்டி என்பதால் அசன்சோல் தொகுதி நட்சத்திர தொகுதியாக அறியப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் வருகிற 29-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
Related Tags :
Next Story