பா.ஜனதாவில் 8 முறை எம்.பி.யான, இந்தூரின் சகோதரி சுமித்ரா மகாஜன் போட்டியிலிருந்து விலகல்
இந்தூர் தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வெற்றியை தனதாக்கிய பா.ஜனதா தலைவர் சுமித்ரா மகாஜன் தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
மக்களவையில் சபாநாயகராக இருக்கும் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று எம்.பி.யாக இருந்து வருகிறார். ஒரே கட்சியிலிருந்து போட்டியிட்டு தொடர்ச்சியாக 8 முறை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை படைத்து லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அடுத்த வாரம் சுமித்ரா மகாஜனுக்கு 76 வயது ஆகிறது.
இந்தூரில் 2014 பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தவர். அவரை அத்தொகுதி மக்கள் சகோதரியென்றே அழைத்து வருகிறார்கள். தூய்மையான அரசியல்வாதியான சுமித்ரா மகாஜன் மிகவும் எளிமையானவர் என பெயர் பெற்றவர். தொகுதிக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். தொகுதியில் மே மாதம் 29-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிக்கு பா.ஜனதா வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்டகாலம் கட்சி தலைவராக பணியாற்றியவருமான 91 வயதாகும் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது விமர்சனத்திற்கு உள்ளானது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘சீட்’ வழங்குவதில்லை என்பது கட்சியின் முடிவு என அமித்ஷா கூறினார். இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பை பா.ஜனதா தலைமை காலம் தாழ்த்தியதால் போட்டியிலிருந்து விலகுவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.
என்னிடம் தெரிவிக்க கட்சி தயங்குவதாக தெரிகிறது, எனவே முடிவு எடுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், போட்டியிலிருந்து விலகுகிறேன் என சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story