ராகுல்காந்தி அமேதி தொகுதியில் 10-ம் தேதியும், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 11-ம் தேதியும் வேட்புமனு தாக்கல்
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதியும், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வரும் 11-ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியிலும், கேரளமாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
நேற்று வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். திறந்த வாகனத்தில் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஊர்வலமாக கல்பேட்டா கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் ராகுல், பிரியங்காவுடன் ஊர்வலமாக வந்து பிரசாரம் செய்தார். சாலையின் இரு ஓரங்களிலும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். வெள்ளமென திரண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர். அங்குலம், அங்குலமாகத்தான் ராகுலின் வாகனம் நகர்ந்தது. ராகுலுடன் பலரும் கை குலுக்கினர். அவருடன் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வருகிற 10-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அவரது தாயார் சோனியாகாந்தி 11ந்தேதி ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
Related Tags :
Next Story