ஆந்திராவில் பெரும் பரபரப்பு என்.டி.ராமராவ் மனைவி மீது செக்ஸ் புகார்
என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி மீது செக்ஸ் புகார் எழுந்திருப்பது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயவாடா,
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி; தெலுங்கு எழுத்தாளர்.
முதல் மனைவி பசவதாரகம், 1985-ம் ஆண்டில் புற்றுநோயால் மரணம் அடைந்த பின்னர் லட்சுமி பார்வதியை 1993-ம் ஆண்டில் ராமராவ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
செக்ஸ் புகார்
என்.டி.ராமராவ் மறைவுக்கு பின்னர் கட்சி சந்திரபாபு நாயுடுவசம் போன பின்னர், லட்சுமி பார்வதி என்.டி.ஆர். தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கி சிறிது காலம் நடத்தினார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்.
இந்த நிலையில் லட்சுமி பார்வதி மீது நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற ஆனந்த் பால் என்பவர் வினுகொண்டா போலீஸ் நிலையத்தில் செக்ஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் வினுகொண்டா மண்டல் உப்பர் அப்பளம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு லட்சுமி பார்வதியை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன்.
கடந்த 18 மாதங்களாக அவர் என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல்கள் அனுப்பி வருகிறார். அவர் ஆபாச படங்களுக்கான இணையதள தொடர்புகளையும், படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார்.
மிரட்டல்
அவரது ஆசைக்கு இணங்கி நடந்தால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் நல்ல பதவி பெற்றுத்தருவதாகவும் கூறினார்.
நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன். ஆனால் அவரோ முறையற்ற வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார். இது எனது குடும்ப வாழ்க்கையில் இடையூறாக அமைந்துள்ளது. அவரது விருப்பத்துக்கு நான் அடிபணியாததால், அவர் என்மீது கோபம் கொண்டுள்ளார். நான் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார்.
எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறி உள்ளார்.
ஆதாரங்கள்
மேலும் அவர் தனக்கு லட்சுமி பார்வதி அனுப்பியது என்று சொல்லி செல்போன் ‘ஸ்கிரீன்ஷாட்’களையும், சில படங்களையும் ஆதாரங்களாக போலீசிடம் அளித்துள்ளார்.
இதுபற்றி வினுகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.வி. சீனிவாச ராவ் கூறும்போது, “கோட்டி என்ற ஆனந்த் பால் அளித்த புகாரை பெற்றுக்கொண்டோம். சட்ட ஆலோசனை பெற்று, ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அதன்பின்னரே வழக்கு பதிவு செய்வோம்” என கூறினார்.
ஆந்திர சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே கட்டமாக 11-ந்தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் லட்சுமி பார்வதி மீதான இந்த செக்ஸ் புகார், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story