ரூ.15 லட்சம் வாக்குறுதியை பா.ஜ.க. வழங்கவில்லை; முன்னாள் மத்திய மந்திரி
ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பா.ஜ.க. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளிக்கவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி கூறியுள்ளார்.
சண்டிகார்,
அரியானாவில் பா.ஜ.க.வின் 39வது நிறுவன நாளை முன்னிட்டு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மத்திய மந்திரி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்பொழுது, குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் நியாய்) செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மற்றும் ரபேல் போர் விமான விவகாரம் ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி பொய் கூறும் வழக்கத்தினை கொண்டுள்ளது என கூறினார்.
அவர்கள் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஏன் அவர்கள் அப்பொழுது ஏழைகளை பற்றி நினைக்கவில்லை? இவை தவிர, இந்த தொகையை அவர்கள் எப்படி தருவார்கள் என்ற நடைமுறை பற்றியும் விளக்கவில்லை. 2004 மற்றும் 2009 தேர்தல்களிலும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் நிறைவேற்ற தவறிவிட்டனர் என கூறியுள்ளார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி பற்றிய கேள்வி ஒன்றிற்கு, ரூ.15 லட்சம் வாக்குறுதியை நாங்கள் அளிக்கவில்லை என நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
தேர்தலுக்கான பொது கூட்டமொன்றில் பேசிய எங்களது தலைவர், வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்பு பணம் திரும்ப கொண்டு வரப்பட்டால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் அளவிற்கு வழங்கலாம் என பேசினார்.
ஆனால் இந்த வாக்குறுதியானது எங்களது கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை என்று பதிலளித்து உள்ளார். பிரதமர் மோடி ஒருபோதும் இதுபோன்ற வாக்குறுதியை அளிக்கவில்லை என்றும் அவர் உறுதிப்பட கூறினார். எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக இல்லாத தகவலை பரப்பி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story