டெல்லியில் காங்கிரஸ் பிரசார பாடல் வெளியீடு


டெல்லியில் காங்கிரஸ் பிரசார பாடல் வெளியீடு
x
தினத்தந்தி 8 April 2019 2:54 AM IST (Updated: 8 April 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சி பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளது. ‘இனிமேல் நியாயம் கிடைக்கும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டு உள்ள இந்த பாடல் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. இதைப்போல இந்த வாக்கியத்தையே தங்களின் தேர்தல் கோஷமாகவும் காங்கிரஸ் உருவாக்கி இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் எம்.பி.யும், விளம்பரக்குழு தலைவருமான ஆனந்த் சர்மா கூறுகையில், ‘ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் நியாய் திட்டம் வாக்காளர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த திட்டத்தை இன்னும் எளிமையாக கொண்டு சேர்ப்பதற்கு இந்த கோஷம் பயன்படும்’ என்று தெரிவித்தார்.

தேசிய அளவில் இந்த கோஷம் பயன்படுத்தப்பட்டாலும், மாநிலங்களுக்கு என தனியாகவும் கோஷங்கள் உருவாக்கப்படும் என்று கூறிய ஆனந்த் சர்மா, இதற்காக பல்வேறு மொழிகளில் கோஷம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தங்கள் விளம்பரங்களில் வெறும் ‘நியாய்’ திட்டம் மட்டுமின்றி விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையிலான தகவல்களும் இடம்பெறும் எனவும் ஆனந்த் சர்மா கூறினார்.

இதைப்போல தேர்தலுக்கு முன்பாக முழுநீள டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக பிரசாரம் மற்றும் விளம்பர பிரசாரங்களை உருவாக்கும் பணிகளிலும் கட்சியின் விளம்பரக்குழு ஈடுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Next Story