தோல்வி பயத்தில் தேர்தல் கமிஷன் மீது பாய்கிறார் - மம்தா பானர்ஜி மீது மோடி குற்றச்சாட்டு


தோல்வி பயத்தில் தேர்தல் கமிஷன் மீது பாய்கிறார் - மம்தா பானர்ஜி மீது மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 April 2019 5:00 AM IST (Updated: 8 April 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

தோல்வி பயத்தில் தேர்தல் கமிஷன் மீது மம்தா பானர்ஜி கோபப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கூச் பேகர்,

மேற்கு வங்காள மாநிலம் கூச் பேகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு, பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். அப்போது இருந்த அரசுக்கு பயங்கரவாதிகள் எங்கிருந்து வருகின்றனர் என்று தெரியும்.

இருந்தாலும், எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் மெத்தனம், பாகிஸ்தானுக்கு வலுவூட்டியது.

இங்கே கேட்கும் ‘மோடி மோடி’ என்ற கோஷத்தால், மம்தா பானர்ஜியின் தூக்கம் போய்விட்டது. அவர் மக்கள் ஆதரவை முழுமையாக இழந்து விட்டார். அவரது தோல்வி உறுதியாகி விட்டது. அவரது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மேற்கு வங்காளம் உறுதி பூண்டு விட்டது.

அதனால்தான், அவர் தேர்தல் கமிஷன் மீது கோபப்படுகிறார். அவர் நடுங்கிப்போய் இருப்பது தெளிவாகிறது.

மம்தா பானர்ஜி, தேச விரோதிகளை ஆதரித்து வருகிறார். நாட்டுக்கு 2 பிரதமர்கள் வேண்டும் என்று கூறுபவர்களுடன் அவர் கைகோர்த்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மம்தா பானர்ஜி ‘வேகத்தடை’ போட்டு வருவதன் மூலம், இம்மாநில மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார். அதனால் அவரை ‘வேகத்தடை தீதி’ என்று அழைக்கலாம்.

சாரதா ஊழல், ரோஸ் வேலி ஊழல், நாரதா ஊழல் என மேற்கு வங்காளத்தின் கவுரவத்தையே மம்தா பானர்ஜி நாசப்படுத்தி விட்டார். கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசுக்கும் இந்த காவலாளி கணக்கு கேட்பான் என்று உங்கள் அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன்.

தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக, சட்டவிரோத குடியேற்றக்காரர்களை மம்தா பானர்ஜி ஆதரிக்கிறார். ஊடுருவல்காரர்களை விரட்டியடிக்க நான் மசோதா கொண்டு வந்துள்ளேன். ஆனால், அதை தடுக்க மம்தா உள்ளிட்டோர் முயற்சிக்கின்றனர்.

மாநிலத்தில் ரவுடிகளை மம்தா பானர்ஜி கட்டவிழ்த்து விட்டுள்ளார். இந்த கூட்டத்துக்கு அதிக அளவில் மக்கள் வருவதை தடுக்கும் வகையில் சின்ன இடத்தை ஒதுக்கி, குழந்தைத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

இந்த காவலாளி மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால், முன்பு சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்தும் இப்போது சாத்தியமாகி வருகிறது. ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு, ஏ.டி.எம். அட்டை சாத்தியம் ஆகியுள்ளது. பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு எளிதாக கிடைக்கிறது.

விரைவில், இந்தியாவில் டெலிபோன் அழைப்புகள் இலவசமாகப் போகின்றன. இணைய கட்டணங்கள், உலகிலேயே நம் நாட்டில்தான் மிகக்குறைவாக இருக்கப் போகிறது. இவ்வாறு மோடி பேசினார்.


Next Story