சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை


சிறுமி ஹாசினி கொலை வழக்கில்  தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
x
தினத்தந்தி 8 April 2019 12:03 PM IST (Updated: 8 April 2019 12:03 PM IST)
t-max-icont-min-icon

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானாள்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.

இதையடுத்து குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 2-ந் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து. அவா் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி எனவும்    தஷ்வந்துக்கு  தூக்கு தண்டனை  வழங்கியும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து  தஷ்வந்த் சார்பில் ஐகோர்ட்டில்  மேல் முறையீடு செய்யப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.

இதனை எதிர்த்து  தொடரபட்ட மேல் முறையீடு வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்து உள்ளது. 

Next Story