கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் 2–வது நாளாக வருமான வரித்துறை சோதனை
கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் 2–வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
போபால்,
வருமான வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய பிரதேச முதல்–மந்திரி கமல்நாத்தின் உதவியாளர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் சுமார் 52 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 2–வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஹவாலா தரகர் பரஸ்மல் லோதாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி இந்த சோதனை நடத்தப்பட்டதுடன், இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சோதனையில் சிக்கியவர்களில் கமல்நாத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி பிரவின் காக்கர், முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர மிக்லானி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
இந்த சோதனையில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ரூ.10 கோடிக்கும் மேல் இதுவரை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான விசாரணை நீடித்து வருகிறது.