நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக மோடி இன்று கர்நாடகம் வருகை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தருகிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு அதாவது சிவமொக்கா, தார்வார், சிக்கோடி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே, தார்வார், கலபுரகி ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கா்நாடகம் வரு கிறார். அவர் மதியம் 1 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
அதை முடித்துக் கொண்டு மோடி மைசூருவுக்கு வருகிறார். அவர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் பிரசார கூட்டத்தை தொண்டர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயில்களில் மெட்டல்-டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் மைசூரு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார் 12 குழுவினர், குதிரைப்படையினர், ரோந்துக்குழுவினர் என சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.அதுபோல் மோடி வருகையையொட்டி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மைசூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து மைசூரு-ஊட்டி சாலை, அரண்மனை அருகில் உள்ள கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து சாமராஜா டபுள்ரோடு, ராமசாமி சர்க்கிள், ஜே.எல்.பி. ரோடு, ஆர்.டி.ஓ. சர்க்கிள், மகாத்மா காந்தி ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
சித்ரதுர்கா மற்றும் மைசூரு தேர்தல் பிரசாரத்தில் மோடியுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.இந்த பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி மீண்டும் 12, 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய கர்நாடகம் வருகிறார்.அதன் பிறகு 18-ந் தேதி (முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் தினம்) வட கர்நாடகத்தில் வாக்கு சேகரிக்க மோடி திட்டமிட்டுள்ளார்.மோடி வருகையையொட்டி பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story