புல்வாமா தாக்குதல் குறித்து முன்பே அறிந்து இருந்த, ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது


புல்வாமா தாக்குதல் குறித்து முன்பே அறிந்து இருந்த, ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது
x
தினத்தந்தி 9 April 2019 5:53 AM GMT (Updated: 9 April 2019 5:53 AM GMT)

புல்வாமா தாக்குதல் குறித்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது முன் கூட்டியே அறிந்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள்  40 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து முன்பே அறிந்து இருந்ததாக, சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி  நிஷார் அகமது, விசாரணையின் போது தெரிவித்ததாக ஆங்கில நாளிதழான இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய சதிகாரனாக விளங்கிய முதாசீர் கான், புல்வாமா தாக்குதலில் பங்கேற்க வருமாறு தன்னிடம் கூறியதாக நிஷார் அகமது தந்த்ரே கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புல்வாமா தாக்குதலுக்கு சதித்திட்டம் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தால் வகுக்கப்பட்டதும், இந்த தாக்குதலில் முதாசீர் கான் ஈடுபட்டதும், மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. மறைந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் நூர் அகமது தந்த்ரேவின் சகோதரரான நிஷார் அகமது தந்த்ரே ஆவார். 

புல்வாமாவின் லெத்போராவில் உள்ள துணை ராணுவ முகாம் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய சதிகாரனாக விளங்கிய  நிஷார் அகமது, ஐக்கிய அரபு அமீரகம் தப்பிச்சென்றான். இதையடுத்து, இந்திய அரசின் கோரிக்கை அடிப்படையில், சமீபத்தில்  நிஷார் அகமதுவை ஐக்கிய அரபு அமீரகம் நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைத்தது.

Next Story