1952-ல் இருந்து ஒரே ஒரு இஸ்லாமிய எம்.பி.யை மட்டும் டெல்லிக்கு அனுப்பிய மாநிலம்
ராஜஸ்தான் மாநிலம் 1952-ல் இருந்து ஒரே ஒரு இஸ்லாமிய எம்.பி.யை மட்டும் டெல்லிக்கு அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதுவரையில் 13 இஸ்லாமிய வேட்பாளர்கள் மாநிலத்தில் களமிறங்கியுள்ளனர். பா.ஜனதா இம்மாநிலத்தில் ஒரேஒரு இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கியது. அயுப் கான் என்ற இஸ்லாமிய வேட்பாளர் மட்டும் இருமுறை அம்மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜான்ஜானு பாராளுமன்றத் தொகுதியில் 4 முறை போட்டியிட்டுள்ளார். அயுப் கான் 1984 மற்றும் 1991 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார். பிவி நரசிம்மராவ் அமைச்சரவையில் விவசாயத்துறை மந்திரியாக இருந்தார்.
அயுப் கான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். 1965-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் அவருடைய பணிக்கு விருது வழங்கப்பட்டது. பாரதீய ஜனதா சார்பில் 1979-ல் மட்டும் பிகானர் பாராளுமன்ற தொகுதியில் மெக்பூப் அலி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார், அவர் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் இஸ்லாமியர்கள் யாரும் வேட்பாளராக நியமனம் செய்யப்படவில்லை.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ராஜஸ்தான் மாநிலத்தில் 10% இஸ்லாமியர்கள் உள்ளனர். 1952-ல் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யாசின் நூரி என்பவர் ஜோத்பூரில் போட்டியிட்டார், ஆனால் தோல்வியை தழுவினார். 1957 தேர்தலில் நூரியையும், மற்றொரு இஸ்லாமிய வேட்பாளர் பிரோஸ் ஷா என்பவரையும் களமிறக்கியது. இருவரும் தோல்வியை தழுவினர். இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றிப்பெறாத நிலையில் 1962, 1967 மற்றும் 1972 தேர்தல்களில் காங்கிரசும் அவர்களை நிறுத்தவில்லை.
நெருக்கடி நிலைக்கு பின்னர் முகமது உஸ்மான் அரீப் என்பவருக்கு சூரு தொகுதியில் 1977-ல் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் தோல்வியையே தழுவினார். 1999-ம் ஆண்டு ஜாலாவாரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அப்ரா அகமதும் தோல்வியையே தழுவினார். 2004- தேர்தலிலும் இரு இஸ்லாமியர்களை களமிறக்கியது. அவர்களும் தோல்வியையே தழுவினர்.
2014 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முகமது அசாரூதினும் தோல்வியையே தழுவினார். இப்போதும் காங்கிரஸ் ஒரு தொகுதியை இஸ்லாமிய வேட்பாளருக்கு கொடுத்துள்ளது. சூரு தொகுதியில் ரபிக் மண்டேலியா போட்டியிடுகிறார். சமூக கருத்தாளர் சிகாந்தர் நியாஸி பேசுகையில், இஸ்லாமிய வேட்பாளர்கள் மற்ற வேட்பாளர்களை போன்று வளங்கள் இல்லாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சிறுபான்மை சமூகத்தின் வேட்பாளர்களுக்கான இடங்கள் மீண்டும், மீண்டும் மாறி வருகிறது. இதுவும் அவர்களால் ஆதரவை திரட்ட முடியாது என்பதற்கு காரணமாக உள்ளது. இப்போது ஜான்ஜானு தொகுதியில் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் காங்கிரஸ் இஸ்லாமிய வேட்பாளரை சூரு தொகுதியில் நிறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story