சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் கேவியட் மனு தாக்கல்
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை–சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018–ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.
சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தும், அரசு நிலம் என்று ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்களை எல்லாம் உரியவர்களிடம் 8 வாரத்துக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்காக வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். மத்திய அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் பா.ம.க. வக்கீல் கே.பாலு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அல்லது வேறு ஏதாவது தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.