தன்டேவாடா தாக்குதலில் 100 நக்சலைட்டுகள் ஈடுபட்டிருக்க கூடும்; போலீசார் தகவல்


தன்டேவாடா தாக்குதலில் 100 நக்சலைட்டுகள் ஈடுபட்டிருக்க கூடும்; போலீசார் தகவல்
x
தினத்தந்தி 10 April 2019 10:14 AM GMT (Updated: 10 April 2019 10:15 AM GMT)

சத்தீஷ்காரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 100 நக்சலைட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.

ராய்ப்பூர்,

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஷ்காரில் நாளை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.  அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த தன்டேவாடா தொகுதியில் பிரசார பணிகளுக்காக பாதுகாப்பு வாகனங்களுடன் நேற்று சென்றுள்ளார்.

அவரது வாகனம் சியாம்கிரி கிராமம் அருகே சென்றபொழுது நக்சலைட்டுகள் வைத்த வெடிகுண்டு வெடித்துள்ளது.  இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ. மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் 4  பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 100 நக்சலைட்டுகள் ஈடுபட்டிருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி தன்டேவாடா போலீஸ் சூப்பிரெண்டு அபிசேக் பல்லவா செய்தியாளர்களுக்கு தொலைபேசி வழியே இன்று கூறும்பொழுது, இந்த தாக்குதலில் தேவா மற்றும் வினோத் ஆகிய தளபதிகளின் தலைமையில் 50 முதல் 60 ஆயுதமேந்தியவர்கள் மற்றும் பிற நக்சலைட்டுகள் உள்பட 100 பேர் ஈடுபட்டிருக்க கூடும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அங்கிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 2 துப்பாக்கிகள் உள்பட 3 ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன.

மிக குறுகிய காலத்தில் அந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான ஆயுதமேந்திய நக்சல்கள் ஒன்றுகூட முடியாது.  இதனால் இது முன்பே திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கக்கூடும்.  எம்.எல்.ஏ.வை சிக்க வைப்பதற்காக மேற்கொண்ட சதியாகவும் இருக்க கூடும் என கூறியுள்ளார்.

தேர்தல் பணிக்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. 3-வது முறையாக இந்த பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  கடந்த 5 நாட்களில் ரிசர்வ் படையினர் 2 முறை ஆய்வு பணி நடத்தியுள்ளனர்.  ஆனால் வெடிகுண்டானது ஒரு நாளிலேயே வைக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த திங்கட்கிழமை எம்.எல்.ஏ. இதேவழியிலேயே சென்றுள்ளார்.  அப்பொழுது, அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கண்ணிவெடி நீக்கும் ஆய்வை மேற்கொண்டனர்.  கூடுதல் பாதுகாப்பு படையும் அவருடன் அனுப்பி வைக்கப்பட்டது.  2-வது முறையாக நேற்று அவர் சென்றுள்ளார்.  இதில், தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு உள்ளார்.

Next Story