‘கருந்துளையை படம் பிடித்தது அசாதாரண சாதனை’ இந்திய விஞ்ஞானிகள் பாராட்டு


‘கருந்துளையை படம் பிடித்தது அசாதாரண சாதனை’ இந்திய விஞ்ஞானிகள் பாராட்டு
x
தினத்தந்தி 12 April 2019 4:17 AM IST (Updated: 12 April 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

கருந்துளையை படம் பிடித்தது அசாதாரண சாதனை என இந்திய விஞ்ஞானிகள் பாராட்டி உள்ளனர்.

புதுடெல்லி, 

வானியல் ஆய்வில் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கும் சர்வதேச விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் அதை உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அதாவது, அண்டவெளியில் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்த கருந்துளையை முதல் முறையாக படம்பிடித்து வெளியிட்டனர்.

நாம் வாழும் பால்வழி மண்டலத்தை போல ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் அண்டவெளியில் அடங்கி இருக்கின்றன. அவற்றின் மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியை கருப்பு நட்சத்திரம் என்றும், கருந்துளை என்றும் விஞ்ஞானிகள் அழைத்து வந்தனர்.

தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியை கூட வெளியேறவிடாமல் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல்களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும், அதை படம் பிடிக்க முடியவில்லை. வெறும் கணினி வரைபடமாக மட்டுமே காண முடிந்தது.

எனினும் அதை நேரடியாக படம்பிடிக்க நீண்ட காலமாக முயன்று வந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

ஸ்பெயின், மெக்சிகோ, சிலி, ஹவாய், அரிசோனா போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ராட்சத ரேடியோ தொலைநோக்கிகளின் உதவியால் இந்த கருந்துளை தற்போது படம்பிடிக்கப்பட்டு உள்ளது. ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் எனப்படும் இந்த சர்வதேச தொலைநோக்கி திட்டம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மேசியர் என்ற நட்சத்திர மண்டலத்தில் உள்ள கருந்துளையைத்தான் விஞ்ஞானிகள் படம்பிடித்து உள்ளனர். எம்87 என பெயரிடப்பட்டு உள்ள இந்த கருந்துளை சூரியனை விட 6500 கோடி மடங்கு எடை உடையது ஆகும்.

ஒளி வெள்ள பின்புலத்தில் கருப்பு கோள வடிவமாக காணப்படும் இந்த கருந்துளையின் புகைப்படத்தை நேற்று முன்தினம் வெளியிட்ட விஞ்ஞானிகள், பார்க்க முடியாது என நினைத்த ஒன்றை பார்த்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகளும், ‘இது ஒரு அசாதாரண சாதனை’ என பாராட்டி இருக்கின்றனர்.

இது குறித்து மும்பை டாடா ஆய்வு நிறுவன இணை பேராசிரியர் சுதிப் பட்டாச்சார்யா கூறுகையில், ‘கருந்துளை பற்றிய முதல் நேரடி ஆதாரம் இது. இது ஒரு மைல்கல் சாதனை. இதன்மூலம் கருந்துளை இருப்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபெற்று விட்டன. கருந்துளை இருப்பதற்கான 99 சதவீத ஆதாரங்கள் ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

ஒளியின் பின்புலத்தில் இருக்கும் கருப்பான அந்த பொருள் நம்ப முடியாத ஒன்று என்று கூறிய அவர், இதுதான் கருந்துளைகளின் நேரடி ஆதாரம் என்றும் குறிப்பிட்டார்.

இதைப்போல இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சவுதாம்ப்டன் பல்கலைக்கழக வானியல் குழும இணை பேராசிரியர் கோஷாக் காந்தி கூறும்போது, ‘கண்ணால் பார்ப்பதே மெய்யானது. அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கருந்துளைகள் பற்றிய முக்கியமான நேரடி ஆதாரம்’ என்று தெரிவித்தார்.


Next Story