அரியானாவில் சுங்க சாவடி ஊழியரை பல கி.மீட்டருக்கு கார் ஓட்டுனர் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம்


அரியானாவில் சுங்க சாவடி ஊழியரை பல கி.மீட்டருக்கு கார் ஓட்டுனர் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 13 April 2019 3:24 PM GMT (Updated: 13 April 2019 3:24 PM GMT)

அரியானாவில் சுங்க சாவடி ஊழியரை காரின் முன்பகுதியில் வைத்து பல கி.மீட்டர் தொலைவுக்கு ஓட்டுனர் இழுத்து சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அரியானாவின் குருகிராம்-மானேசர் நெடுஞ்சாலையில் சுங்க சாவடி ஒன்று உள்ளது.  இங்கு இன்னோவா கார் ஒன்று வந்துள்ளது.  ஆனால் கட்டணம் செலுத்திடாமல் அங்கிருந்து காரை ஓட்டி செல்ல ஓட்டுனர் முற்பட்டு உள்ளார்.  இதனால் ஊழியர் ஒருவர் கட்டணம் கட்டும்படி கூறி  உடனே காரின் முன்னே சென்று நின்று தடுத்து நிறுத்தியுள்ளார்.

எனினும், காரின் முகப்பு பகுதியில் தொங்கியபடி ஊழியரை பல கி.மீட்டர் தொலைவுக்கு ஓட்டுனர் வேகமுடன் இழுத்து சென்றுள்ளார்.

இதுபற்றி அந்த ஊழியர் கூறும்பொழுது, நீ எனது காரை நிறுத்துவாயா? போலீசார் கூட எனது காரை நிறுத்துவதில்லை என கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பரில் நொய்டா நகரில் சாஹிபாபாத் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இதுபோன்று 6 கி.மீட்டர் தொலைவுக்கு காரின் மேற்கூரை பகுதியில் வைத்து இழுத்து செல்லப்பட்டார்.

அதன்பின் ஒரு மாதம் கழித்து, கால் சென்டரில் பணியாற்றிய இளைஞர்கள் சிலர் காரில் சென்றுள்ளனர்.  குடிபோதையில் இருந்த அவர்களை தடுத்து நிறுத்தியதற்காக போலீஸ் கான்ஸ்டபிள் சந்தீப் என்பவரை பல மீட்டர்கள் தொலைவுக்கு காரில் இழுத்து சென்றனர்.  இச்சம்பவத்தில் அவர் பலத்த காயமுற்றார்.

Next Story