பா.ஜனதா சார்பில் போட்டியிட மகனுக்கு ‘சீட்’ பதவி விலக மத்திய மந்திரி விருப்பம் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்


பா.ஜனதா சார்பில் போட்டியிட மகனுக்கு ‘சீட்’ பதவி விலக மத்திய மந்திரி விருப்பம் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்
x
தினத்தந்தி 15 April 2019 5:00 AM IST (Updated: 15 April 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா சார்பில் போட்டியிட மகனுக்கு ‘சீட்’ கிடைத்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய மந்திரி பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உருக்குத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பிரேந்தர் சிங். அரியானாவை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மத்திய மந்திரி சபையில் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது.

பின்னர் இவர் 2016-ம் ஆண்டு அரியானாவில் இருந்து பா.ஜனதா சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த மந்திரி சபை மாற்றத்தின் போது, இவருக்கு உருக்குத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரேந்தர் சிங்கின் மகனான பிரிஜேந்திர சிங்குக்கு அரியானாவின் ஹிசார் தொகுதியை பா.ஜனதா ஒதுக்கி உள்ளது. இது பிரேந்தர் சிங்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் ஒரே குடும்பத்தில் தனக்கும், தனது மகனுக்கும் பதவி கிடைப்பதன் மூலம் வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும் என எண்ணிய அவர், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இது தொடர்பாக கட்சித்தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்கள் பா.ஜனதாவின் கொள்கை, வாரிசு அரசியலுக்கு எதிரானது. தற்போது எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருப்பதால் எனது எம்.பி. பதவியையும், மந்திரி பதவியையும் நான் ராஜினாமா செய்வதே சிறந்ததாக இருக் கும். எனவே இது தொடர்பாக கட்சியின் முடிவுக்கே விட்டுவிடும் வகையில் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். நான் எனது பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பிரேந்தர் சிங்கின் மகனுடன் அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேலும் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது. இந்த பட்டியலை கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

Next Story