‘விவிபாட்’ எந்திரங்களின் பதிவுகளையும் எண்ணும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு


‘விவிபாட்’ எந்திரங்களின் பதிவுகளையும் எண்ணும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு
x
தினத்தந்தி 15 April 2019 3:15 AM IST (Updated: 15 April 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு எந்திரங்களில் பதிவாகிற வாக்குகளையும், ‘விவிபாட்’ எந்திரங்களின் பதிவுகளையும் எண்ணி ஒப்பிடுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் நாடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

புதுடெல்லி,

மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. இதற்கு ஒரு தீர்வாகத்தான் வாக்கினை குறிப்பிட்ட வேட்பாளருக்கு அளித்ததை வாக்காளர் பார்த்து உறுதி செய்கிற ‘விவிபாட்’ எந்திரம் வழி வகுத்தது.

மின்னணு வாக்கு எந்திரத்தில் நாம் எந்த வேட்பாளருக்கு வாக்குப்பதிவு செய்தோமோ, அந்த வாக்காளருக்குத்தான் வாக்குப்பதிவாகி உள்ளதா என்பதை இந்த விவிபாட் எந்திரம் வாக்காளருக்கு காட்டும். ஆனால் அதன் அச்சிட்ட பதிவு, வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. அங்கே சேகரித்து பாதுகாக்கப்படும். இதுதான் நடைமுறை.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்களுடன், இந்த ‘விவிபாட்’ எந்திரங்களும் இணைக்கப்படுகின்றன.

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, ‘விவிபாட்’ எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

ஆனால் இது போதாது, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 வாக்குச்சாவடிகளில் பதிவாகிற வாக்குகளையாவது, இப்படி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க., தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன.

அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவாகிற வாக்குகளை, ‘விவிபாட்’ எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இப்படி செய்கிறபோது, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த வாக்காளர்களும் திருப்தி அடைவார்கள் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.

ஆனால் இதில் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை. இதையொட்டி தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவை தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். அதில் இந்த விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடுவது என முடிவு செய்தனர்.

இதுபற்றி சந்திரபாபு நாயுடு கூறும்போது, “50 சதவீத வாக்கு எந்திரங்களில் பதிவாகிற வாக்குகளை விவிபாட் எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்பது 21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது” என கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிசேக் சிங்வி கூறும்போது, “எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடி, 50 சதவீத வாக்குச்சாவடிகளில் விவிபாட் எந்திரங்கள் உறுதிபடுத்தும் பதிவுகளுடன் எண்ணி சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என முறையிடுவோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் மின்னணு வாக்கு எந்திரங்களின் குளறுபடிகள் தொடர்பாக நாடு முழுவதும் பிரசாரம் செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மின்னணு எந்திரங்களின் குளறுபடிகளை சரிசெய்வதற்கு தேர்தல் கமிஷன் போதுமான அளவிற்கு செய்யவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story