பா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிக்க பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


பா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிக்க பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 April 2019 2:15 AM IST (Updated: 16 April 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தலைவர்களுக்கு வினியோகிப்பதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்கிறார் என்று சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

அமராவதி,

ஆந்திர மாநில முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு பணம் வினியோகிப்பதற்காக, பிரதமர் மோடி தனது ஹெலிகாப்டரில் பணம் எடுத்து செல்கிறார். தனக்கான பாதுகாப்பு வசதிகளை தவறாக பயன்படுத்தி, அவர் இப்படி செய்கிறார்.

அவருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாதா? மோடி, குற்றவாளிகளுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார். அவர் நாட்டை நாசப்படுத்தி வருகிறார்.

தேர்தல் கமிஷன், 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண மறுத்து வருகிறது. இதுபற்றிய வழக்கில், ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 6 நாட்கள் ஆகும் என்று பொய் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. எனவே, 50 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண உத்தரவிடக்கோரி, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்.

தேர்தல் கமிஷனின் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டியபோது, நாங்கள் அரசியல் ஆக்குவதாக குற்றம் சாட்டினர். 190 ஜனநாயக நாடுகளில், வெறும் 18 நாடுகளில்தான் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எந்திர ஓட்டுப்பதிவுக்கு எதிராக ‘ஆபத்தில் ஜனநாயகம்’ என்ற புத்தகத்தை பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் எழுதினார். ஆனால், அவர் தற்போது எந்திர ஓட்டுப்பதிவை நியாயப்படுத்துகிறார். ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியசாமியும் இப்போது அதுபற்றி பேசுவது இல்லை.

ஓட்டுப்பதிவு எந்திரங்களை வேறு இடத்தில் இருந்தபடி முடக்க முடியும். அதன் கட்டுப்பாட்டு அறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

எனவே, மின்னணு ஓட்டுப்பதிவு முறை சரியல்ல. இவ்விஷயத்தில் தேர்தல் கமிஷனின் அணுகுமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மக்கள் போராட்டத்துக்கான செயல் திட்டத்தை வகுப்போம்.

ஆந்திர சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story