துலாபாரம் நிகழ்ச்சியின் போது சசிதரூர் எம்.பி. தலையில் இரும்பு கம்பி விழுந்து படுகாயம் - திருவனந்தபுரம் கோவிலில் பரபரப்பு


துலாபாரம் நிகழ்ச்சியின் போது சசிதரூர் எம்.பி. தலையில் இரும்பு கம்பி விழுந்து படுகாயம் - திருவனந்தபுரம் கோவிலில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2019 9:00 PM GMT (Updated: 15 April 2019 8:03 PM GMT)

திருவனந்தபுரம் கோவிலில் துலாபாரம் நிகழ்ச்சியின்போது சசிதரூர் எம்.பி.யின் தலையில் இரும்பு கம்பி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள புத்தாண்டையொட்டி (விஷூ) கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், தம்பானூரில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலுக்கு நேற்று காலையில் சென்றார். அவருடன் குடும்பத்தினரும், வி.எஸ்.சிவகுமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சியினரும் சென்றனர்.

கோவிலில் வழிபாடுகளை முடித்த சசிதரூர், சாமிக்கு துலாபாரம் கொடுக்க முடிவு செய்தார். இதில் தனது எடைக்கு எடை சர்க்கரையை காணிக்கையாக வழங்க சசிதரூர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக தராசின் ஒரு தட்டில் சர்க்கரையை வைத்துவிட்டு, மறுதட்டில் அவர் அமர்ந்து கொண்டார்.

அப்போது திடீரென தராசின் கொக்கி உடைந்ததால், தராசின் இரும்பு கம்பி சசிதரூரின் தலையில் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் உடை முழுவதும் ரத்தக்கறையாக காட்சியளித்தது. இந்த சம்பவம் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவரை குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சேர்ந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது தலையில் 6 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே தலையில் இருந்து ரத்தம் கொட்டுவது நின்றது.

திருவனந்தபுரம் தொகுதியில் 3-வது முறையாக வெற்றிபெறும் நோக்கில் அங்கு சசிதரூர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து சசிதரூர் எம்.பி.யின் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டன. துலாபாரம் நிகழ்ச்சியில் தராசின் இரும்பு கம்பி விழுந்து சசிதரூருக்கு காயம் ஏற்பட்டது, கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story