இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட சற்று குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 15 April 2019 9:30 PM GMT (Updated: 15 April 2019 8:31 PM GMT)

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட சற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை குறித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த பருவமழை ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நிலையில், அது குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவுக்கு அருகில் (சற்று குறைவு) இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நீண்டகால சராசரி (எல்.பி.ஏ.) அடிப்படையில் பருவமழை அளவை கணக்கிடுகிறது. அதாவது கடந்த 1951 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெய்த மழையின் சராசரி அளவான 89 செ.மீ.யை வழக்கமான அளவாக கணக்கிடுகிறது.

இதில் 96 முதல் 104 சதவீதம் வரையிலான மழை அளவை வழக்கத்துக்கு அருகில் உள்ள அளவு என குறிக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 96 சதவீத பருவமழை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளதால், வழக்கமான அளவுக்கு அருகில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த பருவமழை காலத்தின் தொடக்கத்தில் (ஜூன்) எல்நினோவின் சிறிய தாக்கம் இருக்கும் என கூறியுள்ள அதிகாரிகள், எனினும் ஜூலையில் இருந்து பருவமழை வேக மெடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story