தேர்தல் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தடை - தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை


தேர்தல் பிரசாரம் செய்ய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தடை - தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 9:28 PM GMT)

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் அதிரடியாக தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 11-ந்தேதி நடந்தது.

தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் மும்முரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரியும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி பிரசாரம் செய்து வருகிறார்.

மாயாவதி கடந்த 7-ந்தேதி சகரன்பூர் என்ற இடத்தில் பிரசாரம் செய்யும் போது முஸ்லிம்கள் தங்கள் அணிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மீரட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு பதில் அளிக்கும் வகையில் மத ரீதியாக சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு முன்பு அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இந்திய ராணுவத்தை மோடியின் படை என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு மாயாவதியும், யோகி ஆதித்யநாத்தும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவர் மாயவாதி ஆகியோருக்கு எதிராக, அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் வசிக்கும் இந்தியரான யோகா ஆசிரியர் ஒருவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் மதம், இனம், சாதி, மொழி அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்கு கேட்பது விரும்பத்தகாத ஒன்றாகும். இத்தகைய பிரசாரம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். சாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்களுக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சிகள் வழங்குகின்றன.

அப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்துக்கோ, சட்டசபைக்கோ தேர்ந்தெடுக்கப்பட்டால் நிலைமை மோசமாகும். பிரசாரத்தின் போது யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் பேசியது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது. இவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பு பிரசாரங்களை தடுக்க தேர்தல் கமிஷனுக்கு உதவும் வகையில், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு போதிய அதிகாரம் இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், பின்னர் அறிவுரை வழங்கப்படும் என்றும், அதன் பிறகுதான் புகார் செய்யப்படும் என்றும் கூறினார்.

யோகி ஆதித்யநாத்தும், மாயாவதியும் பேசியது தொடர்பாக, விளக்கம் கேட்டு அவர்கள் இருவருக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும், தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் பற்றியும் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி செவ்வாய்க்கிழமை (இன்று) கோர்ட்டில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தேர்தல் கமிஷனின் பதில் திருப்பதி அளிப்பதாக இல்லை என்றால், விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் கமிஷனரை அழைக்க வேண்டி இருக்கும் என்றும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதாவது, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 72 மணி நேரம் (3 நாட்கள்) தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களில் கலந்துகொள்ளவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவும் யோகி ஆதித்யநாத்துக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இதேபோல் மேற்கண்டவற்றில் ஈடுபட இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு (2 நாட்கள்) மாயாவதிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் தனது உத்தரவில் கூறி இருக்கிறது.

இதேபோல் சுல்தான்பூர் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.

ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார்.


Next Story