தேசிய செய்திகள்

அஸ்தி கரைக்கப்பட்ட நீரோடையில் தந்தை நினைவாக விசேஷ சடங்கு செய்தார், ராகுல் காந்தி + "||" + In the stream dissolved in the ashthi Rahul Gandhi made a special ritual in memory of his father

அஸ்தி கரைக்கப்பட்ட நீரோடையில் தந்தை நினைவாக விசேஷ சடங்கு செய்தார், ராகுல் காந்தி

அஸ்தி கரைக்கப்பட்ட நீரோடையில் தந்தை நினைவாக விசேஷ சடங்கு செய்தார், ராகுல் காந்தி
ராஜீவ் காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நீரோடையில் அவரது நினைவாக ராகுல் காந்தி விசேஷ சடங்கு செய்தார். கோவிலிலும் அவர் வழிபட்டார்.
வயநாடு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் அமேதியுடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். 2 நாள் தேர்தல் பிரசாரத்துக்காக, அவர் கேரளாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று வயநாடு அருகே உள்ள திருநெல்லி கோவிலுக்கு சென்றார். அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இந்த மகா விஷ்ணு கோவில், ‘தென்னாட்டு காசி’ என்று அழைக்கப்படுகிறது.


ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி அங்கு சென்றார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளபள்ளி ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் சென்றனர்.

ராகுல் காந்தி, பாரம்பரிய முறையில் வேட்டி அணிந்து, மேலே பட்டு சால்வை போர்த்தி இருந்தார்.

கோவிலில் ராகுல் காந்தி வழிபட்டார். கருவறை முன்பு தரையில் விழுந்து கும்பிட்டார். கோவிலின் பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து அங்கிருந்த அர்ச்சகரிடம் கேட்டறிந்தார். உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.

பின்னர், ராகுல் காந்தி, கோவிலில் இருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள பாபநாசினி என்ற நீரோடைக்கு புறப்பட்டார். அந்த பாதை, பெரிய பாறைகள் நிறைந்தும், கரடு முரடாகவும் உள்ளது. செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் அந்த பாதையில் ராகுல் காந்தி நடந்து சென்றார். அது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் அழைத்துச்சென்றனர்.

பாபநாசினி நீரோடை, 28 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடமாகும். அந்த நீரோடையில், தந்தையின் நினைவாக ‘பலி தர்ப்பணம்’ என்ற சடங்கை ராகுல் காந்தி செய்தார்.

வேத விற்பன்னர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து அதுபோல் செய்தார். தன் பாட்டி இந்திரா காந்தி நினைவாகவும், புல்வாமா தாக்குதலில் பலியான ரிசர்வ் படை போலீசாரின் நினைவாகவும், இதுவரை உயிரிழந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைவாகவும் அவர் சடங்குகளை செய்தார்.

பின்னர், கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுல்தான் பத்தேரி என்ற இடத்துக்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.

இந்த சடங்கு குறித்து முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கூறுகையில், “வயநாட்டில் கடந்த 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதே இந்த சடங்குகளை செய்ய ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அப்போது செய்ய முடியவில்லை. அதைத்தான் இப்போது செய்துள்ளார்” என்று கூறினார்.

இதுபற்றி ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “வயநாட்டில் திருநெல்லி கோவிலுக்கு சென்றேன். அந்த அழகிய கோவிலும், சுற்றுப்புறமும் அமைதியாகவும், தெய்வீகமாகவும் இருக்கின்றன. என் தந்தையின் அஸ்தி கரைக்கப்பட்ட பாபநாசினி கரையில் நின்றபோது, அவரைப்பற்றிய பாச நினைவுகளும், நாங்கள் ஒன்றாக இருந்த நினைவுகளும் வந்தன” என்று கூறியுள்ளார்.