மரண தண்டனை குற்றவாளிகளின் மனநல பாதிப்பை தண்டனை குறைப்புக்கு பரிசீலிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மரண தண்டனை குற்றவாளிகளின் மனநல பாதிப்பை தண்டனை குறைப்புக்கு பரிசீலிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 April 2019 3:00 AM IST (Updated: 20 April 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

மரண தண்டனை குற்றவாளிகளின் மனநல பாதிப்பை தண்டனை குறைப்புக்கு பரிசீலிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் தனது உறவுக்கார சிறுமிகள் 2 பேரை கடந்த 1999-ம் ஆண்டு கொடூரமாக கற்பழித்து கொலை செய்தார். அவரது காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இதை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளும் உறுதி செய்தன.

இந்த விவகாரத்தில் ஒரு மறுஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, 2-வதாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது. குறிப்பாக தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையே அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு குற்றவாளியின் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு அளித்தது. அதில் குற்றவாளியின் மரண தண்டனையை வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைத்த நீதிபதிகள், அவருக்கு சரியான மனநல சிகிச்சை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதைப்போல மரண தண்டனை விதிக்கப்பட்டபின் குற்றவாளியின் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டால், அதை தண்டனை குறைப்புக்கான காரணியாக மேல்கோர்ட்டுகள் பரிசீலிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதிகள், எனினும் இது தொடர்பாக பல்துறை வல்லுனர்கள் அடங்கிய மருத்துவக்குழு மூலம் குற்றவாளியை பரிசோதித்து உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


Next Story