24 ஆண்டுகளுக்குப்பின் முலாயம் சிங், மாயாவதி இணைந்து ஒரே மேடையில் பிரசாரம்


24 ஆண்டுகளுக்குப்பின் முலாயம் சிங், மாயாவதி இணைந்து ஒரே மேடையில் பிரசாரம்
x
தினத்தந்தி 19 April 2019 11:15 PM GMT (Updated: 19 April 2019 10:21 PM GMT)

உத்தரபிரதேசத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக முலாயம் சிங் மற்றும் மாயாவதி இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். இது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மெயின்புரி,

உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும்புதிருமாக செயல்பட்டு வந்தன. இந்த கட்சியின் தலைவர்களான முறையே முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் இரு துருவங்களாக இயங்கி வந்தனர்.

ஆனால் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியை மையமாக கொண்டு இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தன. அதன்படி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கடந்த சில இடைத்தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நேற்று பிரசாரம் செய்தார். இதனால் இருவரும் 24 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஒரே மேடையில் தோன்றினர்.

இதில் முதலில் பேசிய முலாயம் சிங் யாதவ், ‘மிக நீண்ட காலத்துக்குப்பிறகு நானும், மாயாவதியும் ஒரே மேடையை பகிர்ந்துள்ளோம். எனக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வந்திருக்கும் அவரை வரவேற்கிறேன். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதுடன் நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

பின்னர் மாயாவதி உரையாற்றுகையில், ‘முலாயம் சிங்குக்கு ஆதரவாக நான் ஏன் பிரசாரம் மேற்கொள்கிறேன்? என மக்கள் வியப்படைவார்கள் என்பது எனக்கு தெரியும். கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக சில நேரம் கடினமான முடிவுகளை எடுக்கத்தான் வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான உண்மையான தலைவராக முலாயம் சிங் திகழ்கிறார். மோடியைப்போல போலியான தலைவர் அல்ல’ என்று கூறினார்.

சமாஜ்வாடி கோட்டையாக திகழும் மெயின்புரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி தலைவர்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் மாயாவதி எத்தகைய தயக்கமும் இன்றி, புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தார். இதைப்போல இருவரும் தங்கள் உரையில் ஒருவரையொருவர் புகழவும் தவறவில்லை.

மேடையில் சமாஜ்வாடி நிர்வாகிகள் பலர் முலாயம் சிங்கின் காலை தொட்டு வணங்கினர். உடனே அவர்களை மாயாவதியின் காலை தொட்டும் வணங்குமாறு முலாயம் சிங் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களும் செய்தனர். இதைப்பார்த்த இரு கட்சி தொண்டர்களும் கரகோஷம் எழுப்பி உற்சாகமடைந்தனர்.

உத்தரபிரதேச அரசியலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 1993-ம் ஆண்டு சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து செயல்பட முடிவு செய்திருந்தன. இந்த சூழலில் 1995-ம் ஆண்டு ஒருநாள் லக்னோ விருந்தினர் மாளிகையில் மாயாவதி தனது கட்சித்தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சமாஜ்வாடி தொண்டர்கள் சிலர் அந்த விருந்தினர் மாளிகையை அடித்து நொறுக்கியதுடன் மாயாவதி உள்ளிட்ட பகுஜன் சமாஜ் கட்சியினரையும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமும், அவமதிப்புக்கும் ஆளான மாயாவதி, அத்துடன் சமாஜ்வாடியுடனான உறவை துண்டித்தார். அதுமுதல் இரு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்தன.

சுமார் 24 ஆண்டுகளாக நீடித்த இந்த பகையை மறந்து மீண்டும் இரு தலைவர்களும் இணைந்து செயல்பட தொடங்கி இருப்பதன் மூலம் உத்தரபிரதேச அரசியலில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Next Story