ஒடிசாவில் 14 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்


ஒடிசாவில் 14 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 20 April 2019 10:20 PM GMT (Updated: 20 April 2019 10:20 PM GMT)

ஒடிசாவில் 14 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் கூறியிருப்பதாவது:-

5 நாடாளுமன்ற மற்றும் 35 சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்டு இருந்த 14 தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் கடமை தவறியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18-ந் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் சோரடா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்துவிட்டார். பிஜூ ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் மோசடி செய்துள்ளதாக கூறி அவர் அந்த எந்திரத்தை உடைத்தார். அந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா வேட்பாளர் பின்னர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 6 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விவிபாட் எந்திரங்களுடன் இணைப்பதில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த 6 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இடதுசாரி பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்ட கந்தமால் மாவட்டத்தில் கடினமான சூழ்நிலையிலும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அவர்களது கடின உழைப்பு குறித்து தேர்தல் கமிஷனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story