‘பிரதமர் மோடி தோல்வி பயத்தால் அவதிப்படுகிறார்’ - மம்தா பானர்ஜி தாக்கு


‘பிரதமர் மோடி தோல்வி பயத்தால் அவதிப்படுகிறார்’ - மம்தா பானர்ஜி தாக்கு
x
தினத்தந்தி 20 April 2019 11:04 PM GMT (Updated: 20 April 2019 11:04 PM GMT)

பிரதமர் மோடி தோல்வி பயத்தால் அவதிப்படுவதாக மம்தா பானர்ஜி கூறினார்.

பனிகடா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாநில முதல்-மந்திரியும், கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பனிகடாவில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பிரதமர் மோடி மீதும், மத்திய அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

திரிபுராவில் பா.ஜனதா வென்றால் எனக்கு கவலை இல்லை. ஆனால் அதன் மூலம் அவர்களுக்கு 543 இடங்கள் கிடைக்கப்போவது இல்லை. இந்த காரணத்தால்தான் பிரதமர் மோடி, மேற்கு வங்காளம் முழுவதும் சுற்றித்திரிந்து மக்களை இந்து, முஸ்லிம் என மதரீதியாக பிரித்து ஓட்டுகளை பெற முயற்சிக்கிறார்.

இந்த தேர்தலில், தான் தோற்கப்போவது உறுதி என்பது பிரதமர் மோடிக்கு தெரியும். எனவேதான் அவரது முகம் வெளிறிவிட்டது. அவர் தற்போது தோல்வி பயத்தால் அவதிப்படுகிறார். எனவே உத்தரபிரதேசம், ராஜஸ்தான், புதுடெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் தோல்வி குறித்து முட்டாள்தனமான கருத்துகளை கூறி வருகிறார்.

நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜனதாவுக்கு வாக்களிக்காதீர்கள். பணமதிப்பு நீக்கத்தால் நீங்கள் பட்ட துன்பங்களை மறந்து விட்டீர்களா? அந்த நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். தற்போது தேர்தல் வந்திருக்கும் நிலையில், அதற்கான பதிலடியை நீங்கள் மோடிக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


Next Story