கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு


கேரளா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 23-ந் தேதி ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 21 April 2019 12:15 AM GMT (Updated: 20 April 2019 11:52 PM GMT)

3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 117 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அந்த தொகுதிகளில் 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

3-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. அன்று கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 3-வது கட்ட தேர்தலில் 1,600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களம் இறங்கி இருக்கிறார். இந்த தொகுதி தமிழக எல்லையை யொட்டி அமைந்து உள்ளது.

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வயநாடு தொகுதியில் கடந்த சில நாட்களாக அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலை மோதுகிறது.

ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசை கடுமையாக தாக்கினார்.

வயநாடு தொகுதி பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் கர்நாடக மாநிலத்துக்கு சென்று சிவமொக்கா தொகுதியில் பிரசாரம் செய்தார். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தார்வார் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் பிரசாரம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலையுடன் முடிவடைகிறது.

வாக்குப்பதிவு 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

Next Story