இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்


இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 21 April 2019 10:57 PM GMT (Updated: 21 April 2019 10:57 PM GMT)

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல இடங்களில் நேற்று காலையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஈஸ்டர் பெருவிழா வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் உள்பட ஏராளமானோர் இதில் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தெற்கு ஆசியாவையே உலுக்கி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவத்துக்கு இந்தியாவும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக இந்த பயங்கரவாத சம்பவத்தை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் நடந்துள்ள பயங்கரமான குண்டுவெடிப்புகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிராந்தியத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு இடமில்லை. இந்த துயரமான நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரை சுற்றியே எனது எண்ணம் எல்லாம் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இலங்கை மக்கள் மற்றும் அரசுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொற்கிறோம். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெறவும் வாழ்த்துகிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.

எந்தவிதமான பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்த முடியாது எனவும், அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்ப்பதாகவும் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த தாக்குதல்களை அரங்கேற்றியவர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

இந்த குண்டுவெடிப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கொழும்புவில் பல இடங்களில் குண்டு வெடித்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். பயங்கரவாதத்தின் இந்த கொடும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனமும், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளது.


Next Story