இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்


இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்
x
தினத்தந்தி 23 April 2019 5:41 AM GMT (Updated: 23 April 2019 5:41 AM GMT)

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவான தேசிய புலனாய்வு பிரிவு விருப்பம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 310 பேர் கொல்லப்பட்டனர். 

இலங்கையில் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை, இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்திய பாதுகாப்பு முகமைகள் பார்க்கின்றன. 

இலங்கை தாக்குதல் தெற்கு ஆசியாவில் பயங்கரவாதிகள் தடம் பதிக்க முயற்சிக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவான தேசிய புலனாய்வு பிரிவு விருப்பம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கொழும்புவிற்கு சென்று விசாரணையை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு ஆர்வம் காட்டுகிறது, இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் கோரிக்கை வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 “பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள இலங்கை செல்ல நாங்கள் விரும்புகிறோம். இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதல் இந்திய துணைக்கண்டத்தில் சமீபத்திய ஆண்டுகளில் நடக்கவில்லை. விடுதலைப்புலிகள் தோல்வியை அடுத்து, இலங்கை இதுபோன்ற ஒரு பெரிய தாக்குதலை சந்திக்கவில்லை. இது, இந்தியாவின் நலன்களுக்கு எதிரான ஒரு புதிய சக்தியின் தோற்றத்தை சுட்டிக்காட்டுகிறது” என தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர் என இலங்கை அரசு தெரிவிக்கிறது. இருப்பினும் வெளிநாட்டு சக்திகளின் உதவியின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிட்டது.

இதனையே இந்திய பாதுகாப்பு வட்டாரத் தகவல்களும் குறிப்பிடுகின்றன.  “தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என இலங்கை கூறியுள்ளது. ஆனால் இந்த அமைப்பு தனியாக இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு கிடையாது. இதுபோன்ற தாக்குதலை அவ்வமைப்பு நடத்தியதற்கான வரலாறும் கிடையாது. ஒன்றை மட்டும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள்சேர்த்த ஸ்ரீலங்கர்கள் சிலர் சிரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த கோணத்திலான விசாரணையை புறக்கணிக்க முடியாது” என பாதுகாப்பு வட்டார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

Next Story