பதிலில் திருப்தி இல்லை, மீண்டும் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


பதிலில் திருப்தி இல்லை, மீண்டும் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 April 2019 7:39 AM GMT (Updated: 23 April 2019 7:39 AM GMT)

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

விரைவில் ரபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி,  " காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி இவ்வாறு பேசியதற்கு எதிராக பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பி.யுமான மீனாட்சி லெகி, உச்சநீதிமன்றத்தில் கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். 

நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப்பேச பயன்படுத்தியுள்ளார். தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி தனது பேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும், 23-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று  விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் " ரபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் போது, பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன.

நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காதவகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை” என்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறியது.  மேலும் ராகுல் காந்தி தனது விளக்கத்தை மீண்டும் அளிக்குமாறு கூறியதோடு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ரபேல் வழக்கில் சீராய்வு மனுக்களும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


Next Story