மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் - நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது


மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் - நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2019 9:07 PM GMT (Updated: 23 April 2019 9:07 PM GMT)

மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.27 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக, நெடுஞ்சாலை வாரிய பொதுமேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

மதுரை-கன்னியாகுமரி இடையிலான நெடுஞ்சாலை (என்.எச்.7) பணிகளை, கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை வாரியம் (என்.எச்.ஏ.ஐ.) வழங்கியது. இந்த நிறுவனத்திடம் இருந்து ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் என்.எஸ்.எஸ். நிறுவனம் துணை ஒப்பந்தம் பெற்று பணிகளை செய்து வருகிறது.

இந்த பணிக்கான தொகையை விடுவிப்பதற்கு என்.எச்.ஏ.ஐ. பொதுமேலாளரான (தொழில்நுட்பம்) காலி ஸ்ரீதர், என்.எஸ்.எஸ். நிறுவனத்திடம் ரூ.27 லட்சத்தை லஞ்சமாக கேட்டார். மதுரையில் பணியாற்றி வரும் அவர், இந்த தொகையை ஆந்திராவின் கடப்பாவில் வைத்து தனது உறவினரான சாய் பிரசாத் என்பவரிடம் வழங்க வேண்டும் எனக்கூறி இருந்தார்.

அதன்படி இந்த தொகையை என்.எஸ்.எஸ். நிறுவனம் வழங்கியது. இது குறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், காலி ஸ்ரீதர் மற்றும் சாய் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அத்துடன் என்.எஸ்.எஸ். நிறுவனத்தின் துணை மேலாளர் சுதாகர் வதுப்பு, காலி ஸ்ரீதரின் பணியாளர் பவன் ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள காலி ஸ்ரீதரின் வீடு, அலுவலகம் மற்றும் மதுரையில் அவர் பணியாற்றி வந்த இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையும் மேற்கொண்டனர்.


Next Story