ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: 30-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு


ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: 30-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 April 2019 11:15 PM GMT (Updated: 23 April 2019 10:43 PM GMT)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில், எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியான சில ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ரபேல் விவகாரம் தொடர்பான உத்தரவில் காவலாளி (பிரதமர் மோடி) திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டே தெளிவாக கூறியுள்ளது” என்றார். இதையடுத்து பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி சுப்ரீம் கோர்ட்டில், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 15-ந்தேதி விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ரபேல் வழக்கின் உத்தரவு தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு மாறானதாக உள்ளது. எனவே 22-ந்தேதி ராகுல் காந்தி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீவிர அரசியல் பிரசாரத்தால் இந்த கருத்தை தெரிவித்தேன். இதை எனது அரசியல் எதிரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர். ஆனாலும் எனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி லேகி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தில், ராகுல் காந்தி தன்னுடைய பிரமாண பத்திரத்தில் தான் கோர்ட்டின் உத்தரவை சரியாக படிக்கவில்லை என்றும், பிரசாரத்தின் போது ஒரு வேகத்தில் இதனை கூறியிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய கருத்துக்கு அவர் வருத்தம் மட்டுமே தெரிவித்து உள்ளார். மன்னிப்பு கோரவில்லை என்று கூறினார்.

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி, பிரதமர் மோடியின் காவலாளி பேச்சை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுடன் இணைத்து பேசியதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ரபேல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் தன்னை பரிசுத்தமானவர் என்று அறிவித்துள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி இருப்பதையும் பார்க்க வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு தொடர்பாக விளக்கம் கோரி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ரபேல் விவகாரம் தொடர்பான மறு ஆய்வு மனுவுடன் 30-ந்தேதி விசாரிப்பதாகவும், ராகுல் காந்தி இப்போதைக்கு நேரடியாக கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

சர்ஜிக்கல் தாக்குதல் தொடர்பாக 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது டெல்லி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி.க்கள் குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு 26-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.


Next Story