பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்


பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 25 April 2019 6:04 AM GMT (Updated: 25 April 2019 6:04 AM GMT)

பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறிய வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ், பிரமாணப்பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த நிலையில்,  தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் கூறியது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மதியம் 2 மணிக்கு  உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நீதித்துறை மீது இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பான கடுமையான முடிவு எடுக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது. வசதி படைத்தவர்களும், அதிகாரம் மிக்கவர்களும் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என்று கடுமையான எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் முன்வைத்தது.

Next Story