தெலுங்கானாவில் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானதும் 20 மாணவர்கள் தற்கொலை


தெலுங்கானாவில் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானதும் 20 மாணவர்கள் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2019 12:12 PM GMT (Updated: 25 April 2019 12:12 PM GMT)

தெலுங்கானாவில் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் (11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) ஏப்ரல் 18-ம் தேதி வெளியானதும் மாணவர்களின் தற்கொலை தொடர் கதையாக இருந்து வருகிறது. மாணவர்கள் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏரிகளில் பாதுகாப்பு வழங்கி போலீஸ் கண்காணிப்பு மேற்கொள்கிறது. இதுவரையில் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

9.74 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3.28 லட்சம் மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர் என முடிவில் தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

மாணவர்களின் தற்கொலையை அடுத்து பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ அமைப்புகள் போராட்டங்களை மேற்கொண்டது. இதனால் புதன் கிழமை  மறு மதிப்பீடு இலவசமான முறையில் செய்து கொள்ளலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இலவசமாக தேர்வுத்தாளை மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்யலாம். 

தெலுங்கானாவில் மாணவர்கள் தேர்வு விண்ணப்ப பதிவு மற்றும் முடிவு வெளியிடும் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் அட்மினில் ஏற்பட்ட குளறுபடியே மாணவர்கள் தோல்வியென காட்ட காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவர்கள் தோல்வி அல்லது தேர்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கணித தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜி நாகேந்திராவின் தந்தை விவேகானந்தா பேசுகையில், “என்னுடைய மகன் நன்றாக படிப்பான். அவன் கணித தேர்வில் தோல்வியடைவான் என்று நாங்கள் நினைத்ததுக்கூட கிடையாது. கணிதம் அவனுக்கு மிகவும் விருப்பமான பாடமாகும். அதிகமான மதிப்பெண்களை அதில்தான் எடுப்பான். சாப்பிடாமலே இருந்த அவன், இதுபோன்றதொரு முடிவை எடுப்பான் என நினைக்கவில்லை” என கண்ணீர் விட்டு அழுகிறார். இதுபோன்று அதிகமாக நன்றாக படிக்கும் மாணவர்களும் தோல்வியென தேர்வு முடிவில் வெளியாகியுள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதேபோன்ற நிலையை எதிர்க்கொண்டுள்ள நிலையில் சந்திரசேகரராவ் அரசு மறுதிருத்தம் செய்ய கட்டணம் கிடையாது என்று மட்டுமே அறிவித்தது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநில பெற்றோர் சங்க தலைவர் நாராயண் பேசுகையில், மதிப்பீட்டு அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடு காரணமாக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும் 5, 10 மதிப்பெண்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதேபோன்று தேர்வில் கலந்து கொண்டவர்கள் வரவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் மாணவ செல்வங்கள் உயிரிழப்பை ஏற்க முடியாது என கோபத்துடன் கூறியுள்ளார். 

நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் எடுத்ததாக முடிவு வெளியாகியுள்ளது. இதனையடுத்து மாணவி மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்த போது முடிவு 99 மதிப்பெண்கள் என தெரியவந்துள்ளது. இதுவே முழு தவறு எங்குள்ளது என்பதற்கு சாட்சியாகும் என நாராயண் கூறியுள்ளார். தெலுங்கானா மாநில ஐகோர்ட்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 3 லட்சம் மாணவர்களின் தேர்வு தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 

Next Story