சாப்ட்வேர் கோளாறு; ஏர் இந்தியா நிறுவனத்தின் 137 விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும்


சாப்ட்வேர் கோளாறு; ஏர் இந்தியா நிறுவனத்தின் 137 விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும்
x
தினத்தந்தி 28 April 2019 6:34 AM GMT (Updated: 28 April 2019 6:34 AM GMT)

சாப்ட்வேர் கோளாறால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 137 விமானங்கள் இன்று காலதாமதமுடன் இயங்கும். #AirIndia

புதுடெல்லி,

அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்களுடன் ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு சராசரியாக 674 விமானங்களை இயக்குகிறது.  சர்வதேச அளவிலான இந்த விமான சேவையானது நேற்று பாதிப்படைந்தது.

ஏர் இந்தியாவின் பயணிகள் சேவைக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் (பி.எஸ்.எஸ்.) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  பயணிகளின் முன்பதிவு மற்றும் உடைமைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் இந்த சாப்ட்வேர் செயல்படாத நிலையில், ஏறக்குறைய 6 மணிநேரம் வரை விமான சேவை நேற்று முடங்கியது.  இதனால் நேற்று 149 விமானங்கள் காலதாமதமுடன் இயங்கின.

விமான சேவை பாதிப்பினால் உலகம் முழுவதும் உள்ள பயணிகள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தபடி இருந்தனர்.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, சாப்ட்வேர் கோளாறால் இன்றும் விமான சேவை பாதிக்கப்படும்.  சராசரியாக இன்று 137 விமானங்கள் 197 நிமிடங்கள் வரை காலதாமதமுடன் இயங்கும் என தெரிவித்து உள்ளார்.

Next Story