மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே வன்முறை: தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க பாஜக முடிவு


மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே வன்முறை: தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க பாஜக முடிவு
x
தினத்தந்தி 29 April 2019 5:36 AM GMT (Updated: 29 April 2019 5:36 AM GMT)

மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடி அருகே பாஜக தொண்டர்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர்.

கொல்கத்தா, 

நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.

இதனால் பாஜக தொண்டர்கள் - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் நீட்சியாக பாபுல் சுப்ரியோவின் காரின் பின்பக்க கண்ணாடி  அடித்து நொறுக்கப்பட்டது. இந்த மோதலின் போது, சுப்ரியோ காருக்குள்தான் அமர்ந்து இருந்தார்.

இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாபுல் சுப்ரியோ, வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே நாங்கள் போராடுகிறோம். ஜனநாயக நாட்டில் இதை நான் கூறுவதற்கு வெட்கப்படுகிறேன்” என்றார். பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். 

மத்திய பாதுகாப்பு படையினர் வந்த பிறகே வாக்குப்பதிவை துவங்க வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் கூறி வந்தனர். ஆனால், உடனடியாக வாக்குப்பதிவை துவங்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், இரு கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர்.

Next Story