ஜம்மு காஷ்மீர்: முதல் 2 மணி நேரத்தில் வெறும் 0.91 சதவிகித வாக்குகளே பதிவு


ஜம்மு காஷ்மீர்: முதல் 2 மணி நேரத்தில் வெறும் 0.91 சதவிகித வாக்குகளே பதிவு
x
தினத்தந்தி 29 April 2019 6:07 AM GMT (Updated: 29 April 2019 6:07 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் மக்களவை தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

நாடாளுமன்றத்துக்கு இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் மக்களவை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அனந்தநாக் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

3.45 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், முதல் இரண்டு மணி நேரங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி வெறும் 0.91 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. தற்போது வரை வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மாநில காவல்துறை கேட்டுக்கொண்டதன்படி, அங்கு  பிற்பகல்  4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக அனந்தநாக் மக்களவை தொகுதியில் மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனந்தநாக் மாவட்டத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டத்தில் வரும் மே 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Next Story