சசிதரூர் அமெரிக்கா செல்ல டெல்லி ஐகோர்ட் அனுமதி


சசிதரூர் அமெரிக்கா செல்ல டெல்லி ஐகோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 30 April 2019 7:25 AM GMT (Updated: 30 April 2019 7:26 AM GMT)

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் அமெரிக்கா செல்ல டெல்லி ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் (62), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்த நிலையில் அவரது கணவர் சசிதரூரை தொடர்புப்படுத்தி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதுடன் இவ்வழக்கு முடியும்வரை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் சில கருத்தரங்கங்கள் மற்றும் வேறுசில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால் வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சசிதரூர் விண்ணப்பித்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் மே 5 முதல் 20-ம் தேதிவரை அவர் வெளிநாடுகளில் பயணிக்க இன்று அனுமதி அளித்தது.


Next Story