பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு


பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2019 1:31 PM GMT (Updated: 1 May 2019 1:31 PM GMT)

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான்.


 புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. 

ஆனால் இந்த தீர்மானத்தை ஆராய்வதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று கூறி மார்ச் மாதம் கடைசி நேரத்தில் சீனா தடுத்து விட்டது. இதன் காரணமாக அந்த தீர்மானத்தை 9 மாதங்கள் வரை கிடப்பில் போட முடியும். மசூத் அசார் விவகாரத்தில் 4 வது முறையாக  இந்நடவடிக்கையை சீனா மேற்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு தடை விதிக்க பொருந்தும் என அமெரிக்கா கூறியது. பிராந்திய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்தது. 

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பதை ஏற்க முடியாது என அமெரிக்கா கூறியது. சீனாவை தாண்டி மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள உறுப்பு நாடுகள் யோசிக்கும் என எச்சரிக்கப்பட்டது.  

எனவே மசூத் அசாருக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்பியது. அதன்படி மசூத் அசாருக்கு எதிராக பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது. 1267 தடை கமிட்டிக்கு பதிலாக பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் 1267 தடை கமிட்டியில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதை பயன்படுத்தியே சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஆனால் நேரடியாக தாக்கல் செய்யப்படும் தீர்மானத்துக்கு எந்த வகையிலும் ஆட்சேபனை எழுப்புவதற்கான வழிமுறைகள் வழங்கப்படாது.

அந்தவகையில் மசூத் அசாருக்கு எதிராக அமெரிக்கா நேரடியாகவே வரைவு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். இந்த தீர்மானத்தில் புலவாமா தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவது எப்போது? என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் நிறைவேறினால் மசூத் அசாருக்கு எதிராக பொருளாதார தடை, ஆயுத தடை மற்றும் போக்குவரத்து தடைகள் விதிக்கப்படுவதுடன் அவரது பெயர் ஐ.நா.வின் கருப்பு பட்டியலிலும் சேர்க்கப்படும். அதேநேரம், இந்த வரைவு தீர்மானம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டாலும் அது ஓட்டெடுப்புக்கு வரும் போது, சீனாவின் வீட்டோ அதிகாரத்தையும் எதிர்கொண்டாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக இணைந்து  அழுத்தம் கொடுக்க தொடங்கின. பாகிஸ்தானும் தன்மீதான அழுத்தத்தை குறைத்துக்கொள்ள முயற்சியை மேற்கொண்டது. இதனால் சீனா தன்னுடைய நிலையில் இருந்து இறங்கியது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியை நிர்ணயம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் இந்தியாவின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.


Next Story