அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஆமதாபாத் கோர்ட்டு ‘சம்மன்’
அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு ஆமதாபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
ஆமதாபாத்,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆமதாபாத் பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் என்பவர் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
கடந்த 23–ந் தேதி, மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘கொலை குற்றவாளி பா.ஜனதா தலைவர் அமித் ஷா. எவ்வளவு பெருமைக்குரியது?’’ என்று கூறியுள்ளார்.
சொராபுதின் என்கவுண்ட்டர் வழக்கில் அமித் ஷாவை கடந்த 2015–ம் ஆண்டே சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்துவிட்டது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை கூட ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் விசாரணைக்கு ஏற்க முன்வரவில்லை. அவர் விடுதலையான செய்தி, காங்கிரஸ் உள்பட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். எனவே, இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500–வது பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி அவதூறு குற்றம் இழைத்துள்ளார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, மாஜிஸ்திரேட் டி.எஸ்.தாபி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்திய தண்டனை சட்டம் 500–வது பிரிவின்படி, ராகுல் காந்திக்கு எதிராக குற்றவியல் அவதூறு வழக்குக்கான முகாந்திரம் உள்ளது என்று மாஜிஸ்திரேட் கூறினார். எனவே, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஜூலை 6–ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக ஆமதாபாத்தில் உள்ள மற்றொரு மாஜிஸ்திரேட் கோர்ட்டு கடந்த மாதம் ராகுல் காந்திக்கு ‘சம்மன்’ அனுப்பியது குறிப்பிடத்தக்கது.