மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் பயங்கர தாக்குதல் : குண்டு வெடிப்பில் 16 வீரர்கள் பலி - பிரதமர் மோடி கடும் கண்டனம்


மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் பயங்கர தாக்குதல் : குண்டு வெடிப்பில் 16 வீரர்கள் பலி - பிரதமர் மோடி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 2 May 2019 12:00 AM GMT (Updated: 1 May 2019 9:51 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி கமாண்டோ படை வீரர்கள் 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம், கட்சிரோலி மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவந்தபோதும், அடர்ந்த காட்டுக்குள் அவர்கள் பதுங்கி இருந்து கொண்டு நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் கட்சிரோலி நக்சலைட்டுகள் தடுப்பு போலீஸ் கமாண்டோ படையினர் (சி–60) தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையையும் அவர்கள் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே அங்குள்ள தடாப்பூரில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

நேற்று அதிகாலை 3½ மணிக்கு அங்கு நக்சலைட்டுகள் கும்பலாக வந்தனர். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் 25 லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டனர். அந்த லாரிகள் மீது அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை ஊற்றி தீயிட்டு எரித்தனர். இதனால் அந்தப் பகுதி, புகை மண்டலம் போல ஆனது. அதைத் தொடர்ந்து நக்சலைட்டுகள் அங்கிருந்து காட்டுக்குள் தப்பி விட்டனர்.

இந்த வெறியாட்டம் பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக கட்சிரோலி நக்சலைட்டுகள் தடுப்பு போலீஸ் கமாண்டோ படையினர் ஒரு வாகனத்தில் புறப்பட்டனர்.

இதை நக்சலைட்டுகள் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து, போலீஸ் படையின் வாகனத்தைக் குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டை (ஐ.இ.டி.) அவர்கள் வெடிக்கச் செய்தனர். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தபோது அந்த இடமே குலுங்கியது.

இந்த குண்டுவெடிப்பில் கமாண்டோ படையினரின் வாகனம் வெடித்து சுக்கு நூறாக சிதறியது. அவற்றில் பயணம் செய்த 15 கமாண்டோக்கள் மற்றும் வாகனத்தின் ஓட்டுனர் என 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

சம்பவ இடம் நாக்பூரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நக்சலைட்டுகள் தாக்குதல் குறித்து தகவல் வெளியானதும் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகளை தேடும் பணி, உடனடியாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

கட்சிரோலியில் நக்சலைட்டுகள் நடத்தி உள்ள தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், ‘‘மராட்டிய மாநிலம், கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் இழிவான தாக்குதலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். துணிச்சல் நிறைந்த படையினருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகம் ஒரு நாளும் மறக்கப்படாது. துயரம் அடைந்துள்ள குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் இணைந்து இருக்கும். இத்தகைய வன்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘‘கட்சிரோலி சி–60 போலீஸ் கமாண்டோக்கள், நக்சலைட்டுகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர் என அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இணைந்து இருக்கும். போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கட்சிரோலி போலீஸ் சூப்பிரண்டுடன் தொடர்பில் இருக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

கட்சிரோலியில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதல் பற்றி அறிந்ததும் மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் நடந்த சம்பவம் பற்றி தேவேந்திர பட்னாவிஸ் சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

வீரமரணம் அடைந்த கமாண்டோக்கள் குடும்பங்களுக்கு ராஜ்நாத்சிங் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், நக்சலைட்டுகளை ஒழித்துக்கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் மாநில அரசுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மராட்டியத்தில் கட்சிரோலியில் கமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வேளையில், ‘‘புலவாமா தாக்குதலுக்கு பின்னும் அவர்கள் (மத்திய அரசு) பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இந்த தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்விதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இதை மாநில போலீஸ் டிஜி.பி. சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இது மராட்டிய போலீசுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி என நான் சொல்ல மாட்டேன். இத்தகைய செயல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ, அதை மராட்டிய போலீஸ் எடுக்கும்’’ என குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில், நக்சலைட்டுகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் நேற்று அதிகாலையில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்த தகவல் கிடைத்ததும் நக்சலைட்டு தடுப்பு பிரிவை சேர்ந்த கமாண்டோ படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதை அறிந்தே நக்சலைட்டுகள் அங்கு புதிதாக போடப்பட்டு உள்ள சாலையின் நடுவே சக்தி வாய்ந்த கண்ணி வெடி குண்டுகளை புதைத்து வைத்து வெறியாட்டம் போட்டு உள்ளனர். அதில் சிக்கிய பாதுகாப்பு படையினரின் வாகனம் வெடித்து சிதறி சுக்குநூறாக நொறுங்கியது. அந்த வாகன பாகங்கள் சாலையில் சின்னாபின்னமான நிலையில் சிதறி கிடந்தன.

சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதால், அந்த சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது. பாதுகாப்பு படையினரின் உடல்களும் துண்டு துண்டாக சிதறி கிடந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.


Next Story