சாலைகள், பாலங்கள் கட்டுமான பணிகளை நிறுத்துங்கள்; மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் எச்சரிக்கை
மகாராஷ்டிராவில் போலீசார் உள்பட 16 பேர் கொல்லப்பட்ட நிலையில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதனை நிறுத்த வேண்டுமென நக்சலைட்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான 4வது கட்ட வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில் திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வாக்களித்தனர்.
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தங்களது சொந்த இடத்திற்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் சாலை அமைக்கும் நிறுவனமொன்றின் 27 வாகனங்களை நக்சலைட்டுகள் குழு ஒன்று நேற்று அடித்து நொறுக்கியது.
இதன்பின் குழுவாக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போலீசாரை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நக்சலைட்டுகள் வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15 போலீசார் உள்பட 16 பேர் பலியானார்கள். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்சிரோலியின் பல்வேறு பகுதிகளில் நக்சலைட்டுகள் இன்று எச்சரிக்கை பேனர்களை வைத்துள்ளனர். அதில், இந்த பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் எதுவும் உள்ளூர் மக்களுக்கானது அல்ல. இது ஒரு சில பணக்கார மக்களுக்காகவே. அதனால் இப்பகுதியில் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதனை ஒப்பந்ததாரர்கள் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் கட்சிரோலியின் கசன்சூர் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 37 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட சம்பவமும் சில பேனர்களில் சுட்டி காட்டப்பட்டு உள்ளன. புதிய இந்தியா என்ற பெயரில் இந்து அரசாங்கம் உருவாக்கும் கனவை பொதுமக்கள் அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த பேனர்கள் அனைத்தும் போலீசாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.
Related Tags :
Next Story