லேஸ் சிப்ஸ் விவகாரம்; விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் வாபஸ்: பெப்சி இந்தியா நிறுவனம்


லேஸ் சிப்ஸ் விவகாரம்; விவசாயிகளுக்கு எதிரான வழக்குகள் வாபஸ்:  பெப்சி இந்தியா நிறுவனம்
x
தினத்தந்தி 2 May 2019 4:07 PM GMT (Updated: 2 May 2019 4:07 PM GMT)

குஜராத்தில் உருளை கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை பெப்சி இந்தியா நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.

லேஸ் எனப்படும் சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடும் உருளை கிழங்கு சிப்ஸ்கள் தயாரிப்பதற்காக பெப்சி இந்தியா நிறுவனம் எப்சி-5 ரக உருளை கிழங்குகளை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், குஜராத்தில் விவசாயிகள் சிலர் இந்த ரக உருளை கிழங்குகளை பயிரிட்டு உள்ளனர்.  இதற்கு இந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.   கடந்த ஏப்ரலில் 11 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.  இந்த ரக உருளை கிழங்குகளுக்காக உரிமம் பெற்று வைத்துள்ளோம் என கூறியதுடன், விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டது.

இந்த விசயத்தில் விவசாயிகளுடன் நிரந்தர தீர்வு காண நிறுவனம் ஆனது வாய்ப்புகளையும் வழங்கியது.  அதன்படி, உருளை கிழங்குகளை உற்பத்தி செய்வதற்கான இடுபொருட்களை எங்களிடம் வாங்கி விளை பொருட்களை எங்களிடமே விற்பனை செய்வது என அதில் கூறப்பட்டு இருந்தது.  இதற்கு உடன்படும் பட்சத்தில் வழக்குகளை திரும்ப பெறுவோம் என கடந்த வாரம் கூறியிருந்தது.

இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அரசுடன் நடத்திய ஆலோசனையை அடுத்து வழக்குகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்துள்ளோம்.  அனைத்து விவகாரங்களுக்கும் ஒரு நீண்ட கால மற்றும் அமைதியான தீர்வை கண்டறிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து அதில், விவசாயிகளுடன் இணைந்து எங்களது நிறுவனம் இந்த ரக உருளை கிழங்குகளை உற்பத்தி செய்தது, நாட்டில் பல விவசாயிகளுக்கு பலன் அளித்தது.  அவர்களின் நலனுக்காகவே பெப்சி இந்தியா நிறுவனம், இந்த ரக உருளை கிழங்குகளை பதிவு செய்து பாதுகாக்க நீதிமன்றத்தினை அணுகும் கட்டாயத்திற்கு ஆளானது என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story