மோடி, அமித்ஷா மீதான தேர்தல் விதி மீறல் புகார்கள் : காங்கிரஸ் மனுக்கள் மீது 6–ந் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் - தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மோடி, அமித்ஷா மீதான தேர்தல் விதி மீறல் புகார்கள் : காங்கிரஸ் மனுக்கள் மீது 6–ந் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் - தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2019 4:45 AM IST (Updated: 3 May 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, அமித்ஷா மீது காங்கிரஸ் அளித்துள்ள தேர்தல் விதி மீறல் புகார்கள் குறித்து வருகிற 6–ந் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்துவருவதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக்கோரியும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மோடி மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமி‌ஷனில் 10–க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தனது மனுவில் குற்றம் சாட்டி இருந்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ‘‘பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் தேர்தல் பிரசார அத்துமீறல்கள் குறித்து இதுவரை 11 மனுக்கள் எங்கள் தரப்பில் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் வெறும் 2 மனுக்கள் மீது மட்டுமே தேர்தல் கமி‌ஷன் முடிவெடுத்து உள்ளது. இது முற்றிலும் ஏற்புடையது அல்ல. எனவே, கோர்ட்டு தலையிட்டு மீதம் உள்ள எங்கள் மனுக்கள் மீது விரைந்து முடிவு எடுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் கமி‌ஷன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதாடுகையில், இந்த மனுக்கள் குறித்து மூன்று கமி‌ஷனர்களும் ஒன்றாக அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதால் வருகிற புதன்கிழமை வரை காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த புகார் மனுக்கள் மீது வருகிற 6–ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story