எவரெஸ்ட் முகாமையும் விட்டு வைக்காத பானி புயல்: 20 முகாம்கள் பறந்தன


எவரெஸ்ட் முகாமையும் விட்டு வைக்காத பானி புயல்: 20 முகாம்கள் பறந்தன
x
தினத்தந்தி 4 May 2019 8:34 AM IST (Updated: 4 May 2019 8:34 AM IST)
t-max-icont-min-icon

பானி புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரம் வரை சென்றிருக்கிறது. அங்குள்ள 20 முகாம்கள் காற்றில் பறந்திருக்கின்றன. #CycloneFani

காத்மாண்டு, 

சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது. அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது. இந்த புயல் ஒடிசாவில் நேற்று கரையை கடந்து சென்றது. ஒடிசா நோக்கி சென்ற ‘பானி’ புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது.பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக் கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் பானி புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 6,400 மீட்டர் உயரத்தில் 2-வது மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பானி புயலின் தாக்கத்தால், அங்குள்ள 20 முகாம்கள் காற்றில் பறந்தன. இருப்பினும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் ட்ரெக்கிங் (மலையேற்றம்) நிறுவனங்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ட்ரெக்கிங் செல்வோரின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story