எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை குற்றம்சாட்டுவது கேலிக்குரியது - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேட்டி


எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை குற்றம்சாட்டுவது கேலிக்குரியது - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேட்டி
x
தினத்தந்தி 4 May 2019 9:28 PM GMT (Updated: 4 May 2019 9:28 PM GMT)

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார பேச்சில் விதிமீறல் இல்லை என தெரிவித்த தேர்தல் கமிஷனை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது கேலிக்குரியது என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.

புதுடெல்லி,

வயநாடு தொகுதியில் சிறுபான்மை சமூகத்தினர் அதிகம் இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியது என காங்கிரஸ் தேர்தல் கமிஷனில் புகார் செய்தது. ஆனால் தேர்தல் கமிஷன் பிரதமரின் பேச்சில் விதிமீறல் இல்லை என தெரிவித்தது.

இந்நிலையில் இதுபற்றி மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அளித்த பேட்டி வருமாறு:-

பிரதமர் மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததில் பா.ஜனதா தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் இந்த புகார்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.

உண்மையை சொல்வதென்றால் அவர்கள் தான் தேர்தல் கமிஷன், சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியதாக வரலாறு உள்ளது. தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பு. எதிர்க்கட்சிகள் வேறு எந்த பிரச்சினையும் இல்லாததால் தேர்தல் கமிஷனை குற்றம்சாட்டுவது கேலிக்குரியது.

அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை எதிர்க்கட்சியினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறுவதும் ஆதாரமற்றது. மற்ற கட்சிகளில் உள்ள தலைவர்கள் பல்வேறு காரணங்களால் தங்கள் கட்சியில் இணைய முயல்வதை பா.ஜனதா தடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story